Tuesday 30th of April 2024 11:04:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
பார்வையற்றோரின் கண்கள் வெள்ளைப் பிரம்பு! - நா.யோகேந்தி்ரநாதன்!

பார்வையற்றோரின் கண்கள் வெள்ளைப் பிரம்பு! - நா.யோகேந்தி்ரநாதன்!


“எனது பார்வை இல்லாமற் போனபின்பு நான் எவ்வளவோ புதிய விடயங்களை அறிந்து கொண்டேன். என் ஊனக் கண்களால் கண்டு கொள்ள முடியாத எவ்வளவோ விடயங்கள் இப்போ எனக்குத் தென்பட ஆரம்பித்து விட்டன.

எனது வீட்டுச் சுவர்களும் கதவுகளும் யன்னல் திரைச் சேலைகளும் மாடிப் படிகளின் கைப்பிடிகளும் கூட என்னுடன் மனம் திறந்து உரையாடுகின்றன!

முற்றத்துச் செண்பக மரத்தில் அமர்ந்திருந்து தங்கள் இனிய குரல்களில். பேசும் சிட்டுகளின் காதல் வார்த்தைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மலர்கள் விரிந்து மொட்டவிழ்ப்பதையும் தேனீக்கள் அவற்றில் தேனை உறிஞ்சுவதையும் என்னால் பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில் என் பார்வை விரியும் அளவுக்கே என் கிரகிப்பும் இருந்தது. ஆனால் இப்போ என் பார்வை எல்லையற்று விரிந்து எங்கெங்கெல்லாமோ சஞ்சரிக்கிறது. இதை ஒரு எல்லையற்ற சுகானுபவமாகவே நான் உணர்கிறேன்!”

இது பிரபல மாராட்டிய எழுத்தாளர் வி.எஸ்.காண்டேகர் தனது கண்பார்வை பறிபோன பின்பு தனது அனுபவ உணர்வுகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துகளாகும்.

வி.என்.காண்டேகர் என்ற இந்த மராட்டிய எழுத்தாளர் ஒரு காலத்தில் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவராவார். இவரது “கிரௌஞ்ச வதம்” என்ற நூலில் வரும் இலட்சியக் கதாநாயகன் திலீபன் ஏராளமான தமிழ் வாசகர்களின் நெஞ்சில் பதிந்து விட்ட ஒரு பாத்திரமாகும். அதன் காரணமாகவே பலர் தங்கள் பிள்ளைகளுக்கு “திலீபன்” எனப் பெயர் சூட்டினர்.

இவ்வாறு அந்த நாவல் மூலமும் அதன் இலட்சிய நாயகன் மூலமும் தனக்கென பெரும் வாசகர் வட்டத்தை உருவாக்கியிருந்த வி.எஸ்.காண்டேகர் தன் கண்பார்வையிழந்த பின்பும் எழுதிக் கொண்டேயிருந்தார்.

அவரது இலக்கியப் பயணத்தையோ அவரது பார்வை குறைபாட்டால் பலவீனப்படுத்திவிட முடியவில்லை. மாறாக மேலும் மேலும் வேகமாக்கினார்.

பார்வைக் குறைபாட்டால் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை. அவர் அதைத் தோற்கடித்து முன் சென்றார்.

ஒரு காலத்தில் பார்வையற்றவர்களென்றால் சமூகத்துக்கு ஒரு சுமை என்ற நிலையே நிலவியது. அவர்கள் நடமாடுவது முதற்கொண்டு சகல தேவைகளுக்கும் மற்றவர்களின் உதவி தேவைப்படுபவர்களாயிருந்தனர்.

ஆனால் – இன்று நிலைமை மாறிவிட்டது.

இப்போது அவர்கள் குறையுள்ள மனிதர்களல்ல; அவர்கள் மாற்றுத் திறனாளிகள். அவர்களிடமிருந்து பார்வைத் திறன் பறி போயிருக்கலாம். ஆனால் அவர்களின் ஏனைய புலன்கள் முன்பைவிட வேகமாக மேலெழுகின்றன. மாபெரும் சாதனைகளை ஈட்டுமளவுக்கு வலிமை பெறுகின்றன.

ஒரு மனிதனைக் குறைபாடு எவ்விதத்திலும் பாதிக்கலாம். அப்பாதிப்புக் காரணமாக அவன் முடங்கிப் போய்விட்டால் அத்துடன் அவனின் வாழ்வே அஸ்தமித்து விடுகிறது. ஆனால் அப்பாதிப்புக்கு எதிராக அவன் நம்பிக்கையுடனும் துணிவுடனும் எழுச்சி பெறும்போது அவன் முன்னரை விடப் பலசாலியாகிறான்.

ஹெலன் ஹெல்லர் –

இவளின் வயது 18 மாதமாக இருந்தபோது இவளுக்கு ஏற்பட்ட ஒரு வித மூளைக் காய்ச்சல் காரணமாக அவள் தனது பார்வைத்திறன், பேச்சுத்திறன், கேட்கும் திறன் என்பவற்றை முற்றாகவே இழந்து விடுகிறாள். அவரைப் பராமரிக்க “ஆன் சல்வியன்” என்றொரு ஆசிரியை நியமிக்கப்படுகிறார்.

கெல்லரிடம் எஞ்சியிருந்த தொடுகை உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஏனைய உணர்ச்சிகளைக் கொண்டுவர சல்வியன் முயற்சிக்கிறார். மற்றவர்கள் கதைக்கும்போது கெல்லர் விரல்களால் அவர்களின் சொண்டுகளைத் தொடுவதன் மூலம் அவர்கள் சொல்பவற்றின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளச் சிறிது சிறிதாகப் பயிற்றுவிக்கிறார். இவ்வாறான கடும் முயற்சிகள் மூலம் 19 வயதில் ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன், பிரென்ஞ், ஸ்பெயின் என ஐந்து மொழிகளில் பார்வையற்றவர்களுக்கான “ப்ரெய்லி” இயந்திரத்தில் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்கிறார் ஹெல்லர்.

ஹெல்லர் தனது வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக வெளியிடுகிறார். அது ஏராளமாக விற்பனையானதுடன் பல விருதுகளையும் பெற்றுக்கொடுக்கிறது. மிகவும் சிரமப்பட்டுப் பேசப் பழகிய அவர் காலப்போக்கில் சிறந்ததொரு சொற்பொழிவாளராகிறார்.

பார்வை, கேட்டல், பேச்சாற்றல் என்பவற்றில் பாதிக்கப்பட்ட ஹெல்லர் அவற்றையே தனது ஆயுதங்களாக்கி அமெரிக்காவின் சிறந்த பெண்மணியாக ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டு உயர்ந்து நிற்கிறாள்.

வி.எஸ்.காண்டேகர், ஹெலன் கெல்லர் போன்றவர்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் முடங்கிப் போய்விட வில்லை. மாறாக அவற்றையே ஏணிகளாக்கி மேலும் மேலும் முன்சென்று சாதனைகளை ஈட்டினர்.

1990ல் ஐஸ்வர்யா என்பவரால் எழுத்தப்பட்டு வெளிவந்த ஒரு மிகமிகச் சிறுகதையை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாயிருக்கும்.

“அவர்” என்ற அந்தக் கதையில் வரும் ஒரு போராளி ஒரு போரில் தன் இரு கரங்களையும் இழந்து விட்டான். அவன் தன் நண்பர் மூலம் தன் தலைவனுக்கு தான் கைகளை இழந்து விட்டதால் மற்றவர்களுக்குச் சுமையாக வாழ விரும்பவில்லையெனவும் தான் சாவதற்கு முன்பு தலைவரை ஒருமுறை காணவேண்டுமெனவும் கடிதம் அனுப்புகிறான். இப்படிப் பல கடிதங்கள் அவன் தன் நண்பனைக் கொண்டு எழுதுவித்து அனுப்பிய போதும் எவ்வித பதிலும் வரவில்லை.

கடைசியாக அவன் தற்சமயம் தான் கால்களால் எழுதப் பழகி விட்டதாகவும் இக்கடிதத்தைத் தானே எழுதி அனுப்புவதாகவும் ஒரு கடிதம் எழுதி அவருக்கு அனுப்புகிறான். அடுத்த நாளில் தலைவரே நேரில் வந்து கட்டியணைத்து அவன் நம்பிக்கையுடன் கைகளின் வேலையைக் காலால் செய்யப் பழகியதையிட்டுப் பாராட்டுகிறார்.

இதிலும்கூட ஒரு இழப்பை இன்னொன்றால் ஈடு செய்வது; குறைபாடுகள் கண்டு முடங்கி விடாமல் நம்பிக்கையும் மறு ஆற்றல்களைப் பயன்படுத்தி முன் செல்வது; போன்ற செய்திகள் வலியுறுத்தப்படுகின்றன.

அவ்வகையில் அக்டோபர் 15ம் திகதி சர்வதேச வெண் பிரம்புத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது கண்பார்வையற்றோர் பிரச்சினைகளையும் உணர்வுகளையும் உலகம் புரிந்து கொண்டு அவர்களுக்குக் கரம் கொடுக்க இந்நாள் அழைப்பு விடுக்கிறது.

இந்த வெண்பிரம்பு என்பது வெறும் ஊன்று கோலல்ல!

அது பார்வையற்றவர்களுடன் பேசுகிறது? அவர்களை வழி நடத்துகிறது? கண்ணிருந்தும் குருடரான சில மனிதர்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கிறது.

அதன் மொழியை அவர்கள் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் மொழியை அவை புரிந்து கொள்கின்றன.

வெண் பிரம்பு தினம் –

பார்வையற்றவர்கள் குறைபாடுள்ளவர்கள் அல்ல. மாற்றுத் திறனாளிகள் என்ற செய்தியை உலகுக்குப் பிரகடனம் செய்யும் உன்னத நாள்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகந்திரநாதன்.

15.10.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE